Nature - இயற்கைப் பதிவுகள்

காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.!

Friday, June 21, 2013

அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)

  மே மாதம் இறுதியில் பௌர்ணமி தினத்து அன்று முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் இருந்து மாலை நேரத்தில் மசினகுடி நோக்கி காட்டுப்பாதையில், பொலிரோ ஜீப்பில் மெதுவாக வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக இருபுறமும் கூர்ந்து கவனித்து கொண்டு, யானை நிற்கிறதா... என்று ஆவலோடு அனைவரும் அமைதியாக கவனித்து கொண்டும், கானகத்தை இரசித்து கொண்டும், இரதம் போல் சென்று கொண்டிருந்த வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் பொழுது, மயக்கும் மாலை வேளையில், இடப்புறம் புல் மேட்டில் அறிக்குருவி ஓன்று எங்கள் கண்களில் பட்டது. நாங்கள் பார்த்த அதே வேளையில் அறிக்குருவியும் தலையை நிமிர்த்தி எங்களை பார்த்தது. வண்டியை நிறுத்தினோம். சில வினாடிகளில் தலையைத் தாழ்த்தி புல்லில் மேயத் தொடங்கியது. 
                             Pipits என்று பறவை இயலில் அழைக்கப்படும் அறிக்குருவிகள், பெரியது (Larger Pipits), சிறியது (Smaller Pipits), என பதிமூன்று வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில வகைகள் குளிர்காலத்தில் வலசைப் பறவைகளாக வந்து செல்கின்றன. பெரும்பாலும் இமயமலைப் பகுதியில் இருந்தும், வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்தும் குளிர்காலத்தில் இந்தியா முழுவதும் இடம்பெயர்ந்து பரவலாக காணப்படுகின்றன. மேற்கு மலைத் தொடர்ச்சியில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழக்கூடிய (Endemic) அறிக்குருவி, நீலகிரி அறிக்குருவி, Nilgiri Pipit (Anthus Nilghiriensis) என்று அழைக்கப்படுகிறது. நீலகிரி அறிக்குருவி மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலை தொடர்களில் சுமார் 1000 மீட்டர் உயரத்தில் இருந்து   1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. களக்காடு முண்டந்துறை பகுதியிலும் நீலகிரி அறிக்குருவிகள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
               அறிக்குருவிகள் (Nilgiri Pipit) வானம்பாடியைப் போல உடல்வரிகள் தோற்றமளித்தாலும் வானம்பாடி (Lark) குடும்பத்தை சேர்ந்தது அல்ல. அறிக்குருவிகள் வாலாட்டி (Wagtail) குடும்பத்தை சேர்ந்தது. தலை அமைப்பும், கால்களும் வேறுபடுத்திக் காட்டுவதை உற்று கவனித்து அறிந்துக் கொள்ள முடியும். இது சிட்டுக்குருவியை விட சற்று நீண்ட வாலும், நீண்டு மெலிந்த அலகும், உடலின் மேற்பாகம் தவிட்டு நிறத்தில் கருப்புக்கோடுகள் நிறைந்து காணப்படும். தெளிவான தவிட்டு நிற கண் புருவமும், உடலின் மேற்பாகத்தில் இருக்கும். கறுப்பு கோடுகளும் அறிக்குருவிகளை அடையாளம் காண உதவும். அறிக்குருவிகள் மரங்களின் நிழல்களிலும், புல்வெளிகளிலும், இரை மேயும் இடத்தில் அசையாது நின்று விட்டால், கண்களுக்கு புலப்படாது. தொல்லை ஏற்பட்டால் அருகில் உள்ள செடி அல்லது மரங்களின் கிளைகளில் சென்று அமர்ந்து கொள்ளும். நகர்ந்து செல்லும் போதும், இலைக்களுக்கு அடியில் உள்ள சிறு வண்டுகள், பூச்சிகள், விதைகள் போன்றவற்றை இரையாக மேயும் போதும் அதன் நடையும், வரிகள் உள்ள அதன் உடலும், நமது கண்களையும், மனதையும் மயக்கும்.
                நீலகிரி அறிக்குருவிகள்  மலைப்பகுதிகளில் உள்ள மண் தடத்தில் அல்லது சிறு கற்கள் அடர்ந்த சிறு மண் கட்டிகள் உள்ள ஓரத்தில் தட்டு போன்ற ஆழமில்லாத அழகான கூட்டை கட்டுகின்றன. சில இடங்களில் சிறு புதர் செடிகளுக்கு அடியிலும் அறிக்குருவிகளின் கூட்டை காண முடியும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வெளிறிய மஞ்சள் நிற முட்டைகள் இருக்கும். 
                 மனிதன் கால் படாத காடுகளே இல்லை என்று குறிப்பு ஓன்று உள்ளது. நம் நாட்டில் மனித நடமாட்டம் மட்டும் அல்லாமல் மனித தலையீடும், அட்டகாசம் இல்லாத காடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டு அழிந்து போகும் இயற்கை வளங்களும், அழிந்து போகும் உயிரினங்களின் வாழ்விடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள படாத அழிவுகளின் நிலைகள் ஏராளம். விளைவுகள் நம்மை மெல்ல மெல்ல தாக்கி கொண்டு இருப்பது கூட அறியாமல், செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பதும். இதை அறிந்தவர்களும், அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கும், இயற்கை நேயர்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது. 
               நீலகிரி அறிக்குருவிகள், புல்வெளிகள், புற்கள் உள்ள சதுப்பு வெளிகள் சார்ந்து வாழும் மலைப்பகுதிகளில் கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறி வருவதும் அதன் வாழ்விடங்கள் சேதாரம் ஏற்பட்டு மெல்ல அழிந்து வருவதும், நீலகிரி அறிக்குருவிகள் அழிவை நோக்கி தள்ளப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தீயினால் காடுகளில் உள்ள புல்வெளிகளும், புதர் செடிகளும், சிறு தாவரங்களும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் அழிந்து வருவதுடன், நீலகிரி அறிக்குருவிகள் வாழ்விடங்கள் குறைந்து, சுருங்கி அதன் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. நாங்கள் பார்த்து கொண்டிருந்த அறிக்குருவி தலையை தூக்கி எங்களை பார்ப்பதும், பிறகு இரையை மேய்வதுமாக இருந்தது. அடுத்த முறை நாம் வரும் போது அறிக்குருவியோ அதன் வாழ்விடமான புல்வெளியோ இல்லாமல் இருக்கலாம். மனிதனின் அடுத்த தலைமுறைக்கு நீலகிரி அறிக்குருவி இது தான் என காட்டுவதற்காக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
                பறவைகளை பார்த்து மகிழ்ச்சியோடு நாம் வீடு திரும்புவது போய், துக்கத்தோடு, கவலையோடு காட்டை விட்டு வெளியேறும் நிலை இன்றைக்கு வந்து விட்டது. அரிதான, அழகான பறவைகளை பார்க்கும் போது இனி இதை பார்க்க முடியுமா? என்கிற சந்தேகம் வந்து விட்டது. “பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது” என்று பறவை இயல் அறிஞர் டாக்டர் சலீம் அலி கூறிய கருத்துப்படி நமது அடுத்த தலைமுறை வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டு கொண்டு இருப்பதை அறிய முடிகிறது. மெல்ல எங்கள் வண்டியை நகர்த்தினோம். வண்டி சத்தத்தில் நீலகிரி அறிக்குருவி விர்ர்ர்...... என்று பறந்து அருகில் உள்ள சிறு மரத்தின் கிளையில் அமர்ந்தது.

Thursday, October 4, 2012

காட்டுயிர் வார விழா


                       18 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்பூமியில் மூன்றில் ஒரு பங்கு இயற்கை வளங்கள் மனிதர்களின் வசதிகளுக்கும், பேராசைகளுக்கும் மெல்ல இரையாகி, இன்றைக்கு மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 100 ஆண்டுகளில் அழிந்து போன உயிரினங்களும், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களும் பட்டியலில் இடம் பிடித்தன. பல்லுரியம் சிதைக்கப்பட்டது, பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. தாவர இனங்களும், தாது பொருட்களும் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கின்றது. எல்லா உயிரினங்களுக்கும் வீடாக இருந்த இப்பூமி, மனிதன் என்ற ஒரு உயிரினத்தின் ஆதிக்கத்தால், பேராசையால் இயற்கை சமநிலை சீர்கெட்டு, சீரழிந்து வருகிறது.


           இயற்கை வளம் அழிய தொடங்கிய பின், வளமான மண் சீர்கெட்டு, நீர்நிலைகள் மாசுபட்டு இன்றைக்கு உலகில் பல கோடி மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், ஊட்டசத்து குறைபாட்டினால் நோய்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். உலக வெப்பமயமாதல், எரிபொருள் பற்றாகுறை, பருவநிலை மாற்றம் போன்ற காரணிகள் ஏற்படுவதற்கு இயற்கை சமநிலை குலைந்ததே காரணம். இப்பூமியின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுசூழல்,காட்டுயிர் மற்றும் பல்லுரியம் பற்றிய முக்கியத்துவம் குறித்தும் மேற்கத்திய அறிஞர்கள் கவலைப்பட தொடங்கினர். இன்று வரை சுற்றுசூழல் இயற்கை மற்றும் காட்டுயிர் குறித்த நுட்பமான தகவல்களும், சிந்தனைகளும் நாம் அங்கிருந்து தான் பெற வேண்டியுள்ளது.
               நம் நாட்டை பொறுத்தவரையில் தொழில், வர்த்தகம், அரசியல், சினிமா, இலக்கியம் போன்றவைகளுக்கு தரும் முக்கியத்துவம், இயற்கை, காட்டுயிர், சுற்றுசூழல் சார்ந்த நிகழ்வுகளுக்கு நமது சக்தி வாய்ந்த ஊடகங்கள் அக்கறை கொள்வதே இல்லை. நம் உயிர்மண்டலத்தின், உயிர் பிரச்சனைகளில் ஊடகங்கள் உண்மைகளை அலட்சியப்படுதுகின்றன. சினிமாவுக்கும், நடிகர், நடிகைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயற்கைக்கும், காட்டுயிர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை.    
             சங்ககாலத்தில் உயிரின சூழலில், இயற்கையோடு இயைந்து, நாரையை தூது விட்டு, புலியை பூனை போல் அருகில் வாழவைத்து, யானையை மாடு போல் வேளாண்மைக்கு பயன்படுத்திய நமது மரபு எங்கே போயிற்று?  நமது மரபு சார்ந்த இயற்கை அறிவியலை மீட்டெடுத்து, மண்ணையும், மணிநீரையும், காற்றையும், காட்டுயிரையும் காப்பாற்ற அக்டோபர் காட்டுயிர் வார விழாவை கொண்டாடுவோம், விழிப்புணர்வை உண்டாக்குவோம்.  

Saturday, August 25, 2012

கருங் கழுகு (Black Eagle)





கடந்த மாதம்  இயற்கை நண்பர் ஓம் பிரகாஷ் உடன், கோத்தகிரிக்கு அருகே உள்ள குஞ்சபனை காட்டிற்கு, கானுலா சென்று இருந்தோம். பல்வேறு பறவைகளை பார்த்தோம், குறிப்பாக அடர்ந்த கானகத்தில் மட்டுமே காணப்படும் கருங் கழுகு (Black Eagle) எங்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டு கழுகுகளில் கருங் கழுகு பெரியது, சுமார் 75 செ.மீ நீளமுள்ளது.   இக்கழுகு சிறு பறவைகளையும், ஓணான், பாம்பு,அரணை போன்ற ஊர்வனவற்றையும், பறவைகளின் முட்டை, பறவைக் குஞ்சுகள் போன்றவற்றையும்  வேட்டையாடி உண்ணும். இக் கழுகு இருக்கும் காட்டில், இதன் உணவுக்கான உயிரினங்கள் சிறப்பாக வாழ்கிறது என்று இயற்கை அறிவியல் கூறுகிறது. இயற்கை சமன் பாட்டை நிலை நிறுத்துவதில் கழுகுகளின் பங்களிப்பு சிறப்பானது,கருங் கழுகுகளின் சிறப்பும்,அதன் வாழ்வியலும், இயற்கை சமன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
                                      கருங் கழுகுகளின் சிறப்பை கேட்டு அறிந்த Times of India நிருபர் திருமதி சாந்தா தியாகராஜன்   அவர்கள், எங்களிடம் பேட்டி எடுத்தார். செய்தி கடந்த 20-8-2012 அன்று Times of India வில் செய்தியாக வெளி வந்தது.  

Friday, May 11, 2012

பறவைகளை பார்த்தல் (Bird Watching)


பறவைகளை பார்த்தல் (Bird Watching) மனதிற்கு மகிழ்ச்சியையும், அறிவிற்கு விருந்தாகவும் அமைகின்ற நிகழ்ச்சி. பறவைகளை பார்க்கின்ற பழக்கம் நம்மிடம் பெரும்பான்மையோரிடம் இல்லை. ஆனால் நம்மை சுற்றி 1330 வகை தொகை பறவைகள் இந்திய துணை கண்டத்திலும், தமிழகத்தில்
300 க்கும் மேற்பட்ட பறவைகளும் இருக்கின்றன. நகர் புறத்தில், நாம் வாழும் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வகைகளையும் (species) , கிராம புறம் என்றால் 30 க்கும் மேற்பட்ட வகைகளை சாதாரணமாக பார்க்க முடியும். நம் மக்களில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கிறது? மற்ற பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை செலுத்தும் நாம், இயற்கையான பறவைகளை பார்த்தல் விசயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. மனதிற்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் இது போன்ற இயற்கையான பொழுது போக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் மனபூர்வமாக ஈடுபட்டால் தான், இயற்கை பற்றியான பிரச்சனைகளில் பொது அறிவு உண்டாகும், சுற்று சூழல் பிரச்சனைகளில் தீர்வு ஏற்படும்.

     

  

Thursday, April 19, 2012

சிறுத்தை என்ன குற்றம் செய்தது?

“கொலை வாளினை எடுடா கொடும் செயல் புரிவோர் அறவேஎன்று புரட்சி கவிஞர் பாடினார். படத்தை பாருங்கள் ‘கொடும் செயல் புரிவோர் கொலை வாளினை கையில் வைத்திருக்கிறார்களே என்ன செய்வது? இந்த கொலைகாரர்களிடம் சிறு குழந்தையை போல, சிறுத்தை சிக்கியிருக்கிறதே? என்ன குற்றம் செய்தது? ஏன் இந்த கொலை வெறி?

பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது .சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம். மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் விரைந்து இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது.